Monday 2 January 2017

2016 - ஒரு சின்ன ரீவைண்ட்.


புத்தகம்.
இந்த வருட தொடக்கத்தில் சில புத்தாண்டு சபதங்களை எடுத்தேன், முடிந்த அளவுக்கு புத்தகம் படிக்கவேண்டும் என்பதும் அதில் ஒன்று. நான் ஒரு ஆகச்சிறந்த சோம்பேறி என்பதால், என்னால் நிறைய புத்தகம் படிக்க முடியாது. அதனால் Goodreads Reading Challenge-ல் குறைந்த எண்ணிக்கையில் 24 புத்தகங்களை (மாதத்திற்கு இரண்டு) தேர்வு செய்து திட்டமிட்டபடியே புத்தகங்களை படித்து முடித்தேன். காகித மலர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், உறுபசி, மிளிர் கல், ராஜிவ் காந்தி கொலை வழக்கு, கனவுத் தொழிற்சாலை, அம்மா வந்தாள், சிதம்பர நினைவுகள் ஆகிய புத்தகங்கள் படித்ததில் குறிப்பிட தகுந்தவை. மிகுந்த விருப்பத்துடன் வாங்கிய `மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் " புத்தகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. 2017-ல்
குறைந்தது 30 புத்தகங்களை படிக்க வேண்டுமென்று இலக்கு வைத்திருக்கிறேன், முடியுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
                   
                              *************
பயணம்.
எங்கள் வீட்டில் வீட்டு வேலை செய்யும் பாட்டி ஒருமுறை என்னிடம் கேட்டார்கள் - "நீங்க எங்கயும் வெளியூரெல்லாம் போக மாட்டிங்களா, நீங்க வெளியூர் போனா ஒரு ரெண்டு நாள் லீவ் கிடைக்கும்னு பாத்தா வீட்ட விட்டு அசைய மாட்றிங்களே". ஒவ்வொரு வருடமும் எங்காவது புதிய இடங்களுக்கு பயணம் செய்ய நினைப்பேன், ஆனால் அதை நிறைவேற்ற முயற்சி செய்யாமல் திட்டம் படுதோல்வி அடையும். இந்த வருடம் என் சோம்பலையும் மீறி நான் இதுவரை போகாத சில இடங்களுக்கு பயணம் செய்தேன்.

1. பருவதமலை.
நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்த மலையைப் பற்றியும் அதன் மேலே உள்ள மிகப் பழமையான சிவன் கோவிலை பற்றியும் முதல் முறையாக கேள்விப்பட்டேன், சிவன் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் என்பதால் உடனே அந்த மலை ஏற முடிவு செய்தேன். நானும் என் நண்பனும் செய்யாறிலிருந்து கிளம்பி ஆரணி, போளூர் வழியாக தென்மாதிமங்கலம் கிராமத்திற்கு சென்று அடிவாரத்திலிருந்து மாலை நேரத்தில் மலை ஏற ஆரம்பித்தோம் கருங்கல் படிகள், பாறை வழி, கடப்பாரை நெட்டு இதையெல்லாம் மிகுந்த களைப்புடன் கடந்து இரவு மலை ஏறி முடித்தோம். மலை மீது சிலு சிலுவென்று வீசும் மூலிகை காற்றை சுவாசிப்பதற்காகவே அனைவரும் ஒருமுறையாவது இந்த மலைக்கு வர வேண்டும். மிகவும் சோர்வாக இருந்த எங்களுக்கு மலை மேலுள்ள அன்னதான கூடத்தில் பொங்கலும் சாம்பாரும் கொடுத்தார்கள். மலையில் மின்சார வசதி இல்லாததால் விளக்கு வெளிச்சத்தில் பொங்கல் சாப்பிட்டதும், தாகத்திற்கு மழை நீர் குடித்ததும் (மலையில் தண்ணீர் வசதி இல்லாததால் மழை நீரை சேமித்து சமயலுக்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்) வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் பக்தர்களே சாமிக்கு நேரடியாக பூஜை செய்து வழிபடலாம். நானும் என் நண்பனும் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டது ஒரு மிகச்சிறந்த அனுபவம்.

2. அறகண்டநல்லூர் என் அப்பாவின் சொந்த ஊர். அவர் அங்கிருந்து செய்யாறு வந்து 40 வருடம் ஆகிறது. நானும் என் அப்பாவும் அறகண்டநல்லூர் சென்று அங்குள்ள அதுல்யநாதேஸ்வரர் கோவிலையும், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலையும் பார்த்தோம். நம் பெற்றோர் சிறுவயதில் வாழ்ந்த ஊரை சென்று பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்.
           
                      *******************
ஓட்டுனர் உரிமம்.
நான் டுவீலர் வாங்கி ஓட்ட ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்காமலேயே காலத்தை ஓட்டினேன். சரி இனிமேலாவது திருந்தலாமே என்று இந்த வருடம் கார் ஓட்ட கற்றுக்கொண்டு இரண்டிற்கும் சேர்த்து லைசன்ஸ் எடுத்துவிட்டேன்.
                          *******************
முதல் முறையாக திருவண்ணாமலை கிரிவலம் சென்றது, செய்ய நினைத்து செய்யாமல் விட்டிருந்த பல வேலைகளை செய்து முடித்தது என 2016-ம் ஆண்டு கடந்த ஆண்டுகளைவிட எனக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. நீச்சல் கற்பது, ஹிந்தி கற்பது என 2017- ல் செய்ய வேண்டியதாக ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன், அதில் எவ்வளவு நிறைவேற்ற முடிகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். நன்றி